புதுடில்லி: உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியுடன் ‛பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம் எழுப்பி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு, ‛ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் அனுப்பி, இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது. அவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியா வந்தடைகின்றனர். இதற்காக அண்டை நாடுகளிடம் இந்தியாவை சேர்ந்தவர்களிடம் விசா கேட்கக்கூடாது என்பன உள்ளிட்ட சில விலக்குகளை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி, இந்திய தேசிய கொடியுடன் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்குள் சென்று அங்கிருந்து, நாடு திரும்புகின்றனர். அதேநேரத்தில் உக்ரைனில் படித்துவரும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க, பாக்., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஒரு நபர், இந்த உண்மையை கூறியுள்ளார்.
இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்துடன் வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் இருவர், இந்த முறையை பயன்படுத்தி ருமேனியாவின் புகாரெஸ்ட் பகுதியை வந்தடைந்துள்ளனர். இந்திய கொடி மற்றும் இந்தியர்களால் தங்களுக்கு எளிதாக எல்லையை கடக்க அனுமதி கிடைத்தது என்றனர் அவர்கள்.
Advertisement