பாலக்காடு:பாலக்காடு கோட்டை வளாகத்தில் மண்ணை தோண்டியபோது பீரங்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு நகரின் நடுவே பழமை வாய்ந்த கோட்டை உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கோட்டை வளாகத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டியபோது பீரங்கி குண்டு ஒன்று இருப்பதை கண்டனர்.
இத்தகவலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் மண்ணை தோண்டியபோது மேலும் 46 பீரங்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 1766ல் ஹைதர் அலியால் இக்கோட்டை கட்டப்பட்டப்பட்டுள்ளது. ஹெதர் அலிக்குப் பின் சாமூதிரி ராஜா ஆங்கிலேயர்கள் இக்கோட்டையை கையகப்படுத்தியிருந்தனர்.
அதனால் இவர்களில் யாராவது பீரங்கி குண்டுகளை பாதுகாத்து வைத்திருக்கலாம்.இவற்றை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வரும் 8ம் தேதி பாலக்காடு கோட்டை வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பீரங்கி குண்டுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement