பாலக்காடு:
கேரள மாநிலம் பாலக்காட்டில் திப்பு கோட்டை உள்ளது. இக்கோட்டை பல நூற்றாண்டுகள் பழமையானது ஆகும். இந்தக் கோட்டை ஹைதர் அலி, ஜாமோரின், ஆங்கிலேயர்கள் போன்ற பல்வேறு ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது என்பது வரலாறு.
இந்நிலையில் இக்கோட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை திருச்சூரில் இருந்து வந்த தொல்லியல் துறை குழுவினர் செய்து வருகின்றனர்.சீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக குழாய் அமைக்க தோண்டிய போது 47 பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனே குண்டுகளை பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு மாற்றினர்.
பீரங்கி குண்டுகளின் வயதைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தியவர்கள் யார் என்ற துல்லியமான முடிவை எடுக்க முடியும். முதற்கட்டமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக திப்பு சுல்தான் ராணுவத்தால் இக்குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 8ந் தேதி மகளிர் தினத்தன்று கோட்டைக்குள் பீரங்கி குண்டுகள் காட்சிப்படுத்தப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.