உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
ஆப்பரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களின் சிறப்புவிமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 8000க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ரஷ்யாவின் தாக்குதலில் சிக்கி உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியர்களை மீட்கும் பணிகளை
பிரதமர் மோடி
நேரடியாக பார்வையிட்டு வருகிறார். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். அதன்படி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைந்து மீட்கும் பொருட்டு, விமானப்படை விமானங்களும் களம் இறக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அழைப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான சி17 ரக விமானங்கள் இப்பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு அளிக்கிறோம். பிரச்சினைக்கு தீர்வுகாண நாம் தலைநிமிர்ந்து நின்று தேசிய உறுதியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உக்ரைன் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.