உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில், இந்திய மாணவரான நவீன் நேற்று கார்கிவ்வில் உயிரிழந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ” ரஷ்ய-உக்ரைன் எல்லை வழியாக இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கான பாதையை மனிதாபிமான அடிப்படையில் உருவாக்கும் பணியில் மாஸ்கோ ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் டெல்லி வந்த அலிபோவ், ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் தனது நற்சான்றிதழை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கவில்லை.ஆனால், அதற்குள் இந்திய மாணவர் மரணத்தால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பேசிய அவர், “ரஷ்யா வழியாக மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மாஸ்கோ செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் போர் மண்டலங்களிலிருந்து எளிதாக வெளியேறலாம் என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது, உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் குறித்து மத்திய அரசு கவலைதெரிவித்ததை தொடர்ந்து வந்துள்ளது. மதிப்பீடுகளின்படி, உக்ரைனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷ்ய எல்லைக்கு அருகில் சுமார் 4,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்தியாவின் கவலையைத் தெரிவிக்க, வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (புதன்கிழமை) ரஷ்யா, உக்ரைன் தூதர்களை அழைத்து, கார்கிவ் மற்றும் பிற மோதல் மண்டலங்களில் உள்ள இந்தியர்களை உடனடியாக பாதுகாப்பாக அனுப்புவதற்கான பணியை மேற்கொள்ளும்படி மீண்டும் வலியுறுத்தினார். இதேபோல், ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதர்களும் தங்களது நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.
மேலும் பேசிய ஷ்ரிங்லா, இந்த கோரிக்கையை டெல்லியில் உள்ள தூதரக அதிகாரியிடம் மட்டுமல்ல, மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இடங்களில் உள்ள இரு நாட்டு தூதரக மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
தற்போது, கார்கிவ்வில் நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணிக்கு இந்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக பல முறை இரு தூதர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா எல்லையில் இருந்து கார்கிவ் சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளது. எனவே, இந்தியாவின் பாதுகாப்பான பாதை தேவைக்கு, ரஷ்யாவும் உக்ரைனும் அவசரமாக பதிலளிக்க வேண்டியது கட்டாயம் உள்ளது.
கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள சலகேரி கிராமத்தைச் சேர்ந்த நவீன், கார்கிவ்வில் 4 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தான். ஆனால், ரஷ்ய தாக்குதலின்போது அவர் பரிதாபமாக உயரிழந்தார்.
இதற்கிடையில், கார்கிவில் நவீனின் முன்னாள் விடுதித் நண்பர் கூறுகையில், மளிகைக் கடைக்கு வெளியே ரஷ்ய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் நவீன் உயிரிழந்ததாக அங்கிருந்த மாணவர்களை கூறியதாக தெரிவித்தார்.