ஹிண்டன்:
ரஷிய போர் காரணமாக உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் மீட்பு நடவடிக்கையில் விமானப்படை விமானங்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று நேரில் சந்தித்த பிரதமர், மீட்பு பணி குறித்து விளக்கம் அளித்தார்.
இதையடுத்து ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் இணைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் சி-17 போக்குவரத்து ரக முதல் விமானம் இன்று அதிகாலை ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து ருமேனியா புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் குடிநீர், உணவு பொருட்கள் உள்பட நிவாரண பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அவை உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் மாணவர்கள் உள்பட இந்தியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது-
குறுகிய காலக் கட்டத்தில் உக்ரைனில் இருந்து அதிகமான இந்தியர்கள் நாடு திரும்ப விமானப் படையை சேர்ந்த மேலும் பல விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.