பிஜீங்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவுடனான போரை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யூ உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபாவை தொடர்பு கொண்டு ரஷிய போர் தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்தார். அப்போது, இந்த போரை நிறுத்த ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு உக்ரைன் மந்திரி கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் – ரஷியா இடையானான போர் விவகாரத்தில் ஆரம்பம் முதலே ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்த சீனா தற்போது திடீர் திருப்பமாக உக்ரைனிடம் வருத்தம் தெரிவித்த நிகழ்வு உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.