கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102 இடங்களை கைப்பற்றிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 203 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்த பாஜகவால் 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 144 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 134 இடங்களை கைப்பற்றியது.
பின்னர் ஐந்து நகரங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றது. சிலிகுரி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் நகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன.
இதில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102 இடங்களை கைப்பற்றிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
தகர்பூர் நகராட்சியில் இடது முன்னணி வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜக ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்ற வில்லை. அதேபோல் காங்கிரஸும் ஒரு நகராட்சியை பிடிக்கவில்லை. புதிதாக உருவான ஹம்ரோ கட்சி டார்ஜிலிங் நகராட்சியில் வெற்றி பெற்றது. இதனைத் தவிர 4 நகராட்சியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது.
திரிணமூல் வெற்றி பெற்றள்ள 102 நகராட்சிகளில் 27 நகராட்சிகளில் எதிர்க்கட்சிகள் ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை. மொத்த வார்டுகளிலும் மம்தா கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் அந்த நகராட்சிகளையும் கைபற்றும் முனைப்பில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ‘‘இந்த வெற்றி நமது பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கட்டும். மாநிலத்தின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம். ஜெய் பங்களா’’ எனக் கூறியுள்ளார்.