கனடா,
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷியா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
ரஷியாவின் மோசமான தாக்குதலை கண்டு பல்வேறு நாடுகள் பலவித பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்கக்கூடாது என தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த தேவையற்ற போர் இப்போது நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கிறோம். பீரங்கிகளை தாக்கி அழிக்கும் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் உக்ரைனுக்கு வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.