ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இதனால் உக்ரைன் ராணுவம் கூடுதல் பலத்துடன், ரஷ்யப் படைகளுடன் மோதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவைப் பொறுத்தவரை சுயமாக உக்ரைனுடன் போரிட்டு வருகிறது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என அமெரிக்க ஆதரவு படையினர் மொத்தமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர அமெரிக்க ஆதரவு ஊடகங்கள், ஐ.நா. சபை என சகல தரப்பிலும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. ரஷ்ய ஊடகங்களையும் கூட பேஸ்புக், யூடியூப் ஆகியவை முடக்கியுள்ளன.
இதனால் ரஷ்யா தரப்பு செய்திகள் அதிகம் வெளியுலகுக்குத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், உக்ரைன் தரப்பு செய்திகளே அதிக அளவில் வெளியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் ஆயுதங்களையும், பண உதவியையும் செய்து வருகின்றன. இதுதொடர்பான லிஸ்ட்டைப் பார்க்கலாம்.
அமெரிக்கா – அமெரிக்காவைப் பொறுத்தவரை உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அளித்துள்ளது. பல்வேறு ஆயுதங்களையும் அது வழங்கியுள்ளது.
துள்ளிக் குதிக்கும் குழந்தைகள்.. கவலைகளற்ற நிம்மதி.. ஹங்கேரியில் அமைதி காணும் உக்ரைன்!
ஐரோப்பிய யூனியன் – வரலாற்றிலேயே முதல் முறையாக ஆயுதம் வாங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் பணம் வழங்கியுள்ளது. உக்ரைனுக்கு 450 மில்லியன் ஈரோக்கள் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க அது நிதியுதவி செய்துள்ளது.
கனடா – கனடா நாடானது, 392 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்பியுள்ளது.
ஜெர்மனி – வழக்கமாக போரிடும் நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்புவதில்லை ஜெர்மனி. ஆனால் முதல் முறையாக இந்த நாடும் உக்ரைனுக்கு 1000 டாங்குகளைத் தாக்கி அழிக்கும் ராக்கெட்கள், 500 ஸ்டிங்கர் தரையிலிருந்து வானில் ஏவும் ஏவுகணைகள், 9 ஹோவிட்சர்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இதுதவிர 10,000 டன் எரிபொருள், 14 கவச வாகனங்களையும் உக்ரைனுக்குக் கொடுத்துள்ளது ஜெர்மனி.
ஸ்வீடன் – ஸ்வீடன் எப்போதுமே போர் மூளும்போது நடுநிலை வகிக்கும். ஆனால் இந்த முறை உக்ரைனுக்கு அது உதவியுள்ளது. 5000 டாங்குகளைத் தாக்கி அழிக்கும் ராக்கெட்களை அனுப்பியுள்ளது. டென்மார்க் டாங்குகளைத் தாக்கி அழிக்கும் ராக்கெட்களை அனுப்பியுள்ளது. நார்வே ஹெல்மட், உடல் கவசங்களை அனுப்பி உதவியுள்ளது.
கீவ் நகரில் “வெயிட்டிங் மோட்”.. வட மேற்கில் அதிரடி.. தெற்கே தெறி வேகம்.. திணறும் உக்ரைன்
இங்கிலாந்து – தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை பகிரங்கமாக சொல்லாமல், உக்ரைனுக்கு உதவிகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும், டிஜிட்டல் ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. எரிபொருளையும் அனுப்பியுள்ளது.
பெல்ஜியம் – 3000 தானியங்கி துப்பாக்கிகள், 2000 டாங்குகள் எதிர்ப்பு ராக்கெட்களை அனுப்பி வைத்துள்ளது. இதுதவிர எரிபொருளும் அனுப்பியுள்ளது.
நெதர்லாந்து – நெதர்லாந்து நாடு, தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகளை தருவதாக உறுதி அளித்துள்ளது.
இதுதவிர செக் குடியரசு, குரோஷியா, போர்ச்சுகல், கிரீஸ், ருமேனியா, இத்தாலி, அயர்லாந்து, துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளும் சிறு சிறு ஆயுதங்கள், பண உதவி, எரிபொருள் உதவி என தங்களால் முடிந்ததைச் செய்துள்ளன. ஆனால் இந்த நாடுகள் தரும் ஆயுதங்களை விட பல மடங்கு ஆயுதங்களை ரஷ்யா வைத்துள்ளதால், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போர்க்களத்தில் தடுமாற்றத்திலேயே உள்ளது.