கீவ்: ரஷ்ய தாக்குதலில் இந்த ஏழு நாட்களில் உக்ரைனில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் அவசர சேவை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐநா வெளியிட்ட எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக உக்ரைன் சொல்லும் எண்ணிக்கை உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இன்றோடு முழுமையாக ஒரு வாரமாகிவிட்டது. இதுவரை ராணுவ, விமானப்படை தளங்கள், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்கள் என்று தாக்கிவந்த ரஷ்யப் படைகள் தற்போது மகப்பேறு மருத்துவமனை வரை தனது போரின் கோரப் பிடியை இறுக்கியுள்ளது. அமெரிக்க வான்வழியைப் பயன்படுத்த ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் ரஷ்யாவின் கெர்சன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் பைடனிடம் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர், உடனடிய ரஷ்ய படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் இன்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதுவரை உக்ரைனிலிருந்து 7 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர்.
இன்று கூட அதிபர் ஜெலன்ஸ்கி தனது கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார். உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமா இல்லை இழுபறி நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2,000 பேர் பலி: இதனிடையே, ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் காரணமாக 2,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் என்று உக்ரைன் அவசர சேவை (Ukraine’s emergency service) அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு மணி நேரங்களும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் என உக்ரைன் மக்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். எங்கள் தரப்பு வீரர்களை கணக்கிடாமல், பொதுமக்கள் மட்டும் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், போக்குவரத்து உள்கட்டமைப்புகள், வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் மழலையர் பள்ளிகள் என கடந்த ஏழு நாட்களில் ரஷ்ய படைகள் நூற்றுக்கணக்கான கட்டமைப்புகளை அழித்துள்ளது. இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை கனரக பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்களால் நிகழ்ந்தவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 400 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தது. ஆனால், தற்போது உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல் உலகை உலுக்கியுள்ளது.
முதல் மருத்துவ உதவி: உக்ரைனுக்கான முதல் மருத்துவ உதவி நாளை போலந்துக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் 1000 நோயளிக்களுக்கான அவசர அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் 150,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிற சுகாதார பொருட்கள் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக மனிதாபிமான வழித்தடம் உருவாக்கப்படும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
‘போர்’ என்று அழைக்க வேண்டாம்: உக்ரைன் மீதான படையெடுப்பை ‘போர்’ என்று அழைக்க வேண்டாம் என்று ரஷ்ய அரசு சார்பில் அந்நாட்டு மீடியா மற்றும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நிரந்தர உறுப்புரிமை மறுபரிசீலனை: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உக்ரைன் ஐநா சபையில் கோரிக்கை விடுத்துள்ளது. பேட்டி ஒன்றின் மூலமாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ஐநா சபைக்கு இந்த கோரிக்கையை விடுத்ததுடன், உடனடியாக இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
Zaporizhzhia அணுமின் நிலைய பகுதியை கைப்பற்றிய ரஷ்யா: கார்கிவ் நகரில் இருந்து முன்னேறி வரும் ரஷ்ய படைகள் தற்போது உக்ரைனின் Zaporizhzhia அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்று ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்புத் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். எனினும், கதிர்வீச்சு அளவுகள் இயல்பு நிலையில் உள்ளது என்றும் அவர் கூறியிருப்பது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. அதேநேரம், Zaporizhzhia அணுமின் நிலையம் என்பது ஐரோப்பாவின் மிகப்பெரிய மின் நிலையங்களில் ஒன்று. உக்ரைனின் 15 அணுசக்தி உலைகளில் ஆறு உலைகளை இந்த நிலையமே கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.