ரஷ்ய துருப்புகளின் தொடர் 15 மணி நேர உக்கிர தாக்குதலுக்கு பின்னர் உக்ரேனிய நகரம் மரியுபோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய துருப்புகள் மொத்தமாக சுற்றிவளைத்து உக்கிர தாக்குதல் மேற்கொண்டதாகவும், மரியுபோல் நகரம் மொத்தமாக சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 450,000 மக்கள் குடியிருக்கும் மரியுபோல் நகரை சிதைக்க வேண்டும் என ரஷ்ய திருப்புகள் திட்டமிட்டே தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, மின்சாரம், குடிநீர் சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளதும், முக்கிய பகுதிகளில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள் மிகுந்த பகுதியானது மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எத்தனை பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற கணக்குகள் வெளியாகவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கானவர்கள் கண்டிப்பாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே உயிர் தப்பிய உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுவரை சடலங்களை கைப்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்புகளை அதிகரிக்க, எரிபொருள் நிலையங்கள் மின்சார நிலையங்களை ரஷ்ய துருப்புகள் தகர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரியுபோல் நகரை கைப்பற்றுவதால் கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதப் படைகள் கிரிமியாவில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் இணைந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றே ரஷ்யா திட்டமிட்டு நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.
ரஷ்ய துருப்புகள் போரிடவில்லை எனவும், அவர்கள் உக்ரைன் நகரங்களை மொத்தமாக சிதைப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் உக்ரைன் துருப்புகள் துணிவுடன் எதிர் தாக்குதல் முன்னெடுத்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.