உக்ரைன் போரில் ஒரு புரியாத புதிராக தனது விமானப்படையை அதிக அளவில் பயன்படுத்தாமல் ஓரம் கட்டி வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின்.
புடின், ஏன் விமானப்படையை பயன்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தியிருந்தால் இன்னேரம் உக்ரைன் மொத்தமாக வீழ்ந்திருக்குமே.. விமானப்படையை மட்டும் சைலன்ட்டாக புடின் வைத்திருக்க என்ன காரணம் என்று அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டுள்ளன.
ஆனால் விமானப்படையை புடின் ஓரம் கட்டி வைத்திருக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் விமானப்படையை பயன்படுத்தாமல் வைத்திருப்பது குறித்து ரஷ்யத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.
உக்ரைனில் போர் தொடங்கி 6 நாட்களாகி விட்டது. ஆரம்பத்தில் முப்படைகளும் இறங்கி களமாடின. இதில் உக்ரைன் சற்று நிலை குலைந்து போனது. முதலில் விமானப்படை, உக்ரைனுக்குள் புகுந்து அதன் முக்கியமான விமான தளங்களையெல்லாம் நாசமாக்கி விட்டது. இதனால் உக்ரைன் விமானப்படையால் முழு அளவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
பற்றி எரிகிறது உக்ரைன்.. ரஷ்யா திடீர் ஆவேசம்.. 6வது நாள் போரில் பெரும் சேதம்!
அதன் பின்னர் விமானப்படை செயல்பாடு கிட்டத்தட்ட முடங்கி விட்டது. பெரிய அளவிலான விமானங்களை இதுவரை எடுக்கவே இல்லை ரஷ்யா. பழைய சுகோய் விமானங்கள் மட்டுமே தற்போது ஆக்ஷனில் உள்ளன. இதை விட நவீனமான விமானங்கள் எல்லாம் நிறையவே இருக்கிறது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தாமல் வைத்துள்ளது ரஷ்யா
ரஷ்யா ஏன் திடீரென விமானப்படையை ஓரம் கட்டி விட்டது என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அமெரிக்காவும் கூட இது தொடர்பாக குழப்பத்தில் மூழ்கியுள்ளது. புடின் வில்லங்கமானவர் என்பதால் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், செயலும் ஆணித்தரமாக இருக்கிறது. அதை விட முக்கியமாக எதிர்பாராத வகையில் எதையும் செய்யக் கூடியவர் புடின் என்பதால் விமானப்படை விவகாரத்திலும் அவர் ஏதாவது அதிரடி காட்டக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் விமானப்படையை முழு அளவில் ரஷ்யா பயன்படுத்தியபோது விமான எதிர்ப்பு பீரங்கிகளால் உக்ரைன் நடத்திய பதிலடித் தாக்குதலில் ரஷ்யாவின் போர்விமானங்கள் பல வீழ்த்தப்பட்டன. இதை ரஷ்யா எதிர்பார்க்கவில்லை. இதையடுத்தே ரஷ்யா, தனது விமானப்படையை முழுமையாக நிறுத்தி வைக்க முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.
ஒரே ஒரு “மிஸ்ஸைல்”.. மொத்த பில்டிங்கும் காலி.. பற்றி எரியும் கார்கிவ் போலீஸ் தலைமையகம்!
உக்ரைன் போர்
இப்போதைக்கு நிற்காது.. நிச்சயம் நீடிக்கவே வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை கீவ் உள்ளிட்ட நகரங்களை பிடித்து விட்டால் கண்டிப்பாக நேட்டோ படைகள் போருக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி நேரிடும்போது பெரிய அளவிலான, அதி நவீன போர் விமானங்கள் நிச்சயம் தேவைப்படும். எனவே உக்ரைனிடம் போர் விமானங்களை மேலும் பறி கொடுப்பதற்குப் பதில் அவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது. எனவேதான் விமானப்படையை அது நிறுத்தி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம், உக்ரைன் தனது விமானப்படையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் மீது உக்ரைன் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியும் வருகின்றன. ரஷ்யா தனது விமானப்படையை பயன்படுத்தாமல் இருப்பதால், ரஷ்ய ராணுவத்துக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. விமானப்படை உதவி இல்லாமல் எந்த நாட்டின் ராணுவமும் ஒரு போரில் வெற்றி பெற இயலாது. தரைப்படை தடையின்றி முன்னேற வான் வெளியிலும், கடல் மார்க்கமாகவும் படையினரின் வழிகாட்டுதலும், சப்போர்ட்டும் தேவை. ஆனால் ரஷ்ய ராணுவத்துக்கு விமானப்படை உதவி தற்போது கிடைக்கவில்லை. இது பாதகமாக பார்க்கப்படுகிறது.
விமானப்படை இல்லாத காரணத்தால்தான் கீவ் உள்ளிட்ட நகரங்களைப் பிடிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்படுவதாகவும் ரஷ்ய ராணுவம் கருதுகிறது. ஆனால் இப்போதைக்கு விமானப்படையை நிறுத்தி வைப்பதைத் தவிர ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என்பதால் ராணுவம் நிலைமையை திறம்பட சமாளித்து வருகிறது. உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும் கூட ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு முன்னேறிக் கொண்டுதான் உள்ளது.
வாய் தவறி உளறிய பிடன்.. “அயோ தப்பு தப்பு”.. கமலா கண்ணு எப்படி போகுது பாருங்க..!
இன்னொரு குழப்பமான காரணத்தையும் சொல்கிறார்கள். அதாவது ரஷ்ய ராணுவம், எல்லைப் பகுதியிலிருந்து உக்ரைனுக்குள் நுழைந்து வெகு தூரம் போய் விட்டது. இதனால் விமானப்படையால் அதற்கு பாதுகாப்போ வழிகாட்டுதலோ தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு படைகளும் இணைந்து போனால்தான் பொருத்தமாக இருக்கும். ஆனால் ராணுவம் முன்னேறிப் போய் விட்ட நிலையில் அதற்கு வழி காட்ட வேண்டிய அவசியம் விமானப்படைக்கு வரவில்லை. இதனால் கூட விமானப்படையை ரஷ்யா நிறுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போது ரஷ்ய ராணுவத்தை பெரிதாக சோதித்து வருவது அமெரிக்க தயாரிப்பு டிரோன்களும், இங்கிலாந்தின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும்தான். ரஷ்யா தனது வேகத்தைக் குறைக்க இதுதான் காரணம். எதிர்பார்த்ததை விட உக்ரைன் ராணுவம் சிறப்பாக செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் கூட ரஷ்யாவின் வேகம் குறைய முக்கியக் காரணம். இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு திறம்பட செயல்படுகிறதாம் உக்ரைன். இதை ரஷ்யா எதிர்பார்க்கவில்லை.
மேலும் கடந்த 8 வருடமாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் மோதிய அனுபவம் உக்ரைனுக்கு உள்ளது. இதுவும் தற்போது ரஷ்யாவுடனான போரில் அதற்கு பெருமளவில் உதவுகிறது. பிரிவினைவாதிகள் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களும், ரஷ்யா கொடுத்ததுதான். எனவே ரஷ்யா என்ன மாதிரியான ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பதில் உக்ரைன் நல்ல நிபுணத்துவம் பெற்றுள்ளது. அதேபோல சிரியாவில் கிடைத்த போர் அனுபவத்தைக் கொண்டு உக்ரைனை வெளுத்தெடுத்து வருகிறது ரஷ்யா. இரு நாடுகளும் சமீப காலமாக நல்ல போர் அனுபவத்துடன் இருப்பதால் ரஷ்யாவின் ஆதிக்கத்தை சமாளிக்க உக்ரைனால் முடிந்துள்ளது.
இப்படி பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் கூட ரஷ்யாவின் விமானப்படையின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. நாளை உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் போரில் குதித்தால், தனது உண்மையான விமானப்படை பலத்தை களம் இறக்க ரஷ்யா தயாராகவே இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.