நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஜூலை மாதம் படத்திற்கான பணிகள் யாவும் தொடங்கின. இந்நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்களில் ‘விக்ரம்’ படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத்தின் இசையில், இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தொடர்ச்சியான ஊரடங்கு கட்டுப்பாடுகள், தேர்தல் வேலைப்பாடுகள் போன்ற காரணங்களால் இந்தப் படத்துக்கான கால்ஷீட்டில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், அதை சரிவர ஒதுக்குவதற்காக அவர் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இரு வாரத்துக்கு முன்னர்தான் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்”- கனத்த இதயத்துடன் காரணத்தை அறிவித்த கமல்ஹாசன்!
இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து படத்தின் போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் நடக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததற்கான அறிவிப்பை நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகர் நரைன் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.