வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த திருவிழா, பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவை யொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதேபோல, ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, முத்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
ஊர்வலத்தின் பின்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய்சிலிர்க்கச் செய்தது. ஊர்வலத்தில் மேள, தாள முழங்க இளைஞர்களும், சிறுவர்களும் உடன் சென்று மகிழ்ந்தனர்.
ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டும், சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மயான கொள்ளை ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடைந்தது. இளைஞர்களும், சிறுவர்களும் பல்வேறு இடங்களில் ஆரவாரம் செய்தனர். ஊர்வலத்தில் போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வேலூர் – காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் பாலாற்றங்கரைக்கு தேரில் சாமியுடன் ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மயானப் பகுதியில் தங்களது முன்னோர் சமாதிகளுக்கும் சென்று பொதுமக்கள் படையிலிட்டு வழிபாடு நடத்தினர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதன்பிறகு, தாங்கள் கொண்டு சென்ற சாமியுடன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக திரும்பினார்கள். அப்போது வழியில் இருந்த பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
மயான கொள்ளை திருவிழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் நகரப் பகுதியில் 500 காவலர்களும், மாவட்டம் முழுவதும் 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழி பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.
வேலூர் கிரீன் சர்க்கிள், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காகிதப்பட்டரை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்திலும், 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர். 3 மாவட்டங்களிலும் மயான கொள்ளை திருவிழாவை யொட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்துடன் பாதுகாப்புப்பணிக்காக காவலர்கள் சென்றனர்.
மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 10 அடிக்கு மேல் தேர்கள் இருக்கக்கூடாது. அன்னதானம் இசைக்கச்சேரிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தில் மது அருந்திவிட்டு செல்லக்கூடாது பிற மதத்தினருக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளுடன் இன்று மயான கொள்ளை திருவிழா அமைதியான முறையில் நடைபெற்றது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்