கீவ்: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி வந்தால் பாதுகாப்பு நிச்சயம் என்று இந்திய தூதரகம் அறிவித்திருந்த நிலையில், அதைப் பயன்படுத்தி பாகிஸ்தான், துருக்கி மாணவர்களும் எல்லைகளை அடைந்துள்ளனர்.
இது குறித்து உக்ரைனின் ஒடேசாவிலிருந்து ருமேனியா வழியாக தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவர் கூறும்போது, “இந்தியக் கொடியை ஏந்திச் சென்றால் பத்திரமாக எல்லையை அடையலாம் என்பதை தூதரக அறிவிக்கை மூலம் தெரிந்துகொண்டோம். அதனால், நான் கடை திறந்த நேரம் பார்த்து ஸ்ப்ரே பெயின்ட் வாங்கி வந்தேன். நாங்கள் இருந்த அறையிலிருந்த திரைச்சீலையை எடுத்து, அதில் மூவர்ணக் கொடியை உருவாக்கினேன். பின்னர் அதைப் பயன்படுத்தி எல்லையை அடைந்தோம். நான் மட்டுமல்ல, சில துருக்கிய மாணவர்களும் இதுபோன்று செய்தே எல்லையை அடைந்தனர்” என்றார்.
“ஒடேசாவில் உள்ள நாங்கள் மால்டோவா, ருமேனியா எல்லையை அடைய இந்திய தேசியக் கொடி உதவியாக இருந்தது” என பாகிஸ்தானிய, துருக்கி மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், துருக்கி நாட்டு தூதரங்கள், இந்தியத் தூதரங்கள் போல் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அந்நாட்டு மாணவர்களின் ஆதங்கமாக உள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நபர், இந்த உண்மையை பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத மாதா கீ ஜே என்ற உரக்க கூறி வருகின்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் அனைவரும் தேசியக் கொடியை எங்கள் பேருந்தில் கட்டி ஒடேசாவிலிருந்து மால்டோவா வந்து சேர்ந்தோம். மால்டோவா மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். இந்தியத் தூதரகம் ஏற்கெனவே தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நாங்கள் மால்டோவா வந்தவுடன் எங்களை தகுந்த தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். முதலில் எங்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்தனர். பின்னர், எங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துவிட்டு எந்த விமானத்தில் அனுப்புவது என்பதைப் பட்டியலிட்டனர். அதன் பிறகு எங்களிடம் தகவல்களைத் தெரிவித்தனர்” என்று கூறினார்.
ஆபரேஷன் கங்கா: ரஷ்யாவின் படையெடுப்பின் தீவிரத்தால் உக்ரைன் நிலைமை உக்கிரமைடைந்து வருகிறது. ரஷ்யாவின் மிக அருகில் அமைந்த உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள கீவ் தலைநகர் உள்ளது. இதனுள், இன்று ரஷ்யா தனது ராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனால், உக்ரைனில் பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகிவிட்டது. உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ மீட்பு பணியில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதில், இன்று மட்டும் எட்டு விமானங்கள் டெல்லிக்கு வருகின்றன. காலையில் வந்த இரண்டு விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உள்பட சுமார் 350 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.