மூன்றாவது உலகப் போர் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து உள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஏழு நாட்களாக ரஷ்யப் படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கார்கிவ் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள், கெர்சான் நகரிலும் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யப் படைகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு பொது மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, உக்ரைன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில், இதுவரை, சுமார் 6,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பழிக்குப்பழி: 6,000 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சந்தித்து வரும் உக்ரைன், வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்கினால், அது பேராபத்தாக மாறும். வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மூன்றாவது உலகப் போர் ஒருவேளை நடந்தால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அது பேரழிவை ஏற்படுத்தும்.
ரஷ்யா
தனிமைப்படுத்தப்படவில்லை. ஏராளமான நாடுகள் நட்பு நாடுகளாக உள்ளன. போரினால், பொருளாதார தடை ஏற்படும் என எதிர்பார்த்தோம். விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் மீது குறிவைப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.