சென்னை
சென்னை நகரின் தெருக்களில் சுற்றித் திரிந்த 585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி ரூ.9 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.
சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்து போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறு செய்து வருகின்றன. இது குறித்து ஏராளமான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் காளைகள் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு மாடு ஒன்றுக்கு ரூ.1550 அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு அவை புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களில் அடைக்கப்பட்டன. இவ்வாறு கடந்த 1 ஆம் தேதி மட்டும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் 23 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 32,550 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதைப் போல் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையால் ஜனவரி மாதம் 287 மாடுகளும் பிப்ரவரி மாதம் 298 மாடுகள் என மொத்தம் 585 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.9,06,750 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.