ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரில் உக்ரைன் அதிபருக்கு ஒரு பக்கம் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் புடினுக்கு ஆதரவாக பலர் கிளம்பியுள்ளனர். டிவிட்டரில் #istandwithputin டிரெண்ட் ஆகி வருகிறது.
உக்ரைன் விவகாரம்தான் இன்று உலகின் பேசு பொருளாகியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் அமெரிக்காவும் நேட்டோவும்தான். ஐரோப்பிய நாடுகளைக் குறி வைத்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், ரஷ்யாவை முடக்கிப் போடுவதே.
முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகள் பலவற்றை அது நேட்டோவில் இணைத்துள்ளது. தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனிலும் அமெரிக்கா தலையிட்டு நேட்டோவில் இணைக்க முயற்சிக்கவே கடுப்பாகி விட்டது ரஷ்யா. பலமுறை சொல்லிப் பார்த்தும் உக்ரைனும் கேட்பதாக இல்லை. தனது பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையிலேயே தொடர்ந்து உக்ரைனும், அதைத் தூண்டி விடும் அமெரிக்காவும் நடந்து வந்ததால் முழு அளவிலான தாக்குதலுக்கு உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர்
புடின்
.
இதையடுத்து ரஷ்ய ராணுவம் வரலாறு காணாத அளவில் மிகப் பெரிய போரில் இறங்கியுள்ளது. 2ம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் மிகப் பெரிய போராக இது பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முழு அளவில் ஆதரவு தெரிவிக்கின்றன. பணம், பொருள், ஆயுதம் என எல்லாவற்றையும் அள்ளி வழங்குகின்றன. உக்ரைன் அதிபர் யூதர் என்பதால் அவருக்கு மேற்கத்திய நாடுகளில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அதிபர் புடினுக்கும் ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவை கடுமையாக சாடி பலரும் கருத்திட்டு வருகின்றனர். #istandwithputin டிரெண்ட் ஆகியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் போட்டுள்ள டிவீட்டில், கடந்த 23 ஆண்டுகளில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் இணைந்து 9 இஸ்லாமிய நாடுகளில் ஊடுறுவினர். 11 மில்லியன் முஸ்லீம்களைக் கொ ன்று குவித்தனர். ஆனால் அவர்களை யாரும் ஊடுறுவல்காரர்கள், தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை என்று சாடியுள்ளார்.
சன்னி ராஜ்புத் என்பவர் போட்டுள்ள டிவீட்டில், ரஷ்யா இந்தியாவுக்கு பல வகையிலும் உதவியுள்ளது. 1957ல் காஷ்மீர் விவகாரத்தில் வீட்டோவைப் பயன்படுத்தி நமக்கு உதவியது. 1961ல் கோவாவை விடுவிக்க உதவியது. 1962ல் காஷ்மீருக்கு ஆதரவாக செயல்பட்டது. 1971ல் காஷ்மீருக்கு ஆதரவாக இருந்தது என்று பட்டியலிட்டுள்ளார்.
ராஜேஷ் என்பவர் போட்டுள்ள டிவீட்டில் அமெரிக்காவுக்கு பண, அதிகார பசி அதிகம். ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என அது சூறையாடாத நாடுகள் இல்லை. ஆனால் இன்று தனது நாட்டின் பாதுகாப்புக்காக ரஷ்யா போர் தொடுத்துள்ளபோது போரை நிறுத்து என்று அது பதறுகிறது என்று சாடியுள்ளார்.
அடிப்படையிலேயே இந்தியர்கள் மத்தியில் உக்ரைன் மீது நல்ல பெயர் இல்லை. காரணம் அது அடிப்படையில் ஒரு ஆயுத வியாபாரி. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நாடு. அதை விட முக்கியமாக அமெரிக்காவின் கைப்பாவையாக அது மாறியுள்ளது. மேலும் இந்தியர்கள் மத்தியில் ரஷ்யா என்றால் இயல்பாகவே ஒரு பாசம் வந்து விடும். சோவியத் யூனியன் உடைந்து சிதறியபோது அதிகம் வருத்தப்பட்டவர்கள் இந்தியர்கள்தான். காரணம் இந்தியாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் இருந்தது. இதெல்லாம் சேர்ந்துதான் தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியர்களை மாற்றியுள்ளது.