புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. நேற்று வரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உ.பி.யின் சோன்பத்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்க நம்மால் முடியும். அதற்குரிய சக்தியும், தைரியமும் நம்மிடையே உள்ளது.
உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் அங்கு தவிக்க விடமாட்டோம். அங்கு ஒருவர் கூட மீட்காமல் விடப்படமாட்டார். நமது ராணுவப் படைகளின் வீரத்தையும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தையும் கேள்வி கேட்டவர்களால் நாட்டை வலிமையாக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.