கீவ்: பெலாரஸ்-போலந்து எல்லையில் உக்ரைன் – ரஷ்யா இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியுள்ளது. இதனிடையே, புதினின் நடவடிக்கை குறித்து புதிய தகவலை பிரான்ஸ் அதிபரின் உதவியாளர் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. துறைமுக நகரான கெர்னாஸ்கைக் கைப்பற்றியது. பெரும்பான்மையான கார்கிவ் பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை: இதனிடையே, பெலாரஸ்-போலந்து எல்லையில் உக்ரைன் – ரஷ்யா இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் மனிதாபிமான உதவி கிடைக்கும் என உக்ரைன் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவோ, இந்த பேச்சுவார்த்தை தற்போதைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்த சுற்று பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதினின் இலக்கு என்ன? : ஒருபுறம் தாக்குதல், ஒருபுறம் பேச்சுவார்த்தை என உக்ரைன் நிலவரம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதின் குறித்து ரஷ்யாவில் இருந்து வெளிவந்துள்ள புதிய தகவல் கூடுதல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. 2ம் சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்தியில் பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரனின் உதவியாளர் ஒருவர் கொடுத்துள்ள அறிக்கையில், “புதின் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்” என்றார். சில மணிநேரங்களுக்கு முன்பு புதினுடன் இம்மானுவேல் மேக்ரன் தொலைபேசியில் பேசியதை அடுத்து இந்த தகவலை அவர் வெளிப்படுத்தினார். மேலும், உக்ரைன் ‘மோசமான நிலைக்கு வரலாம்’ என்று மேக்ரன் அச்சம் தெரிவித்ததாகவும் அந்த உதவியாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கீவ் நகருக்கு வெளியே ரஷ்ய படைகள்: ஏற்கெனவே கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. உக்ரைன் தரப்பும் தாங்கள் மிகப் பெரிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக ரஷ்யப் படைகளிடம் இழந்துள்ளதாக உறுதி செய்துள்ளது. பொதுமக்களில் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. உயிர்பிழைத்தால் போதுமென இதுவரை 10 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வெளியே ரஷ்ய படைகள் காத்துக்கிடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் முக்கிய தாக்குதல் படையான அது கீவ் நகருக்கு வடக்கே நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ளன என்றும் அவற்றில், பல குண்டுவீசும் பீரங்கி வாகனங்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சொத்து பறிமுதல் மசோதாவுக்கு ஒப்புதல்: ரஷ்யா அல்லது ரஷ்ய குடிமக்களுக்கு சொந்தமாக உக்ரைனில் உள்ள சொத்துக்களை கைப்பற்றும் மசோதாவிற்கு உக்ரைன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. போரின் உக்கிரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக, ரஷ்யர்களின் சொத்துக்களை கைப்பற்ற உக்ரைன் முனைந்துள்ளது.
செர்னிஹிவ் விமானத் தாக்குதலில் 22 பேர் பலி: உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதல்களில் சுமார் 22 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என உக்ரைன் அவசர சேவை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கும் அந்த அமைப்பு, தாக்குதல் நடந்த இடங்களைப் பற்றி குறிப்பிடவில்லை.
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஜெர்மனி: இந்த கடினமான சூழலிலும் மனிதாபிமான அடிப்படையில் உக்ரேனிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முனைந்துள்ளது ஜெர்மனி. உக்ரைனில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட அகதிகள் ஏற்கனவே ஜெர்மனிக்கு வந்துள்ளனர், இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.
உக்ரைன் வீழ்ந்தால்… ஜெலன்ஸிகி எச்சரிக்கை: மேற்கத்திய நாடுகளிடம் அதிக அளவிலான ராணுவ உதவிகளை கோரி சமீபத்தில் வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸிகி, கூடவே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதில், “உக்ரைன் வீழ்ந்தால் எங்கள் எல்லையில் ராணுவத்தை நிறுத்தி ரஷ்யா வேடிக்கை பார்க்காது. அடுத்து பால்டிக் ஸ்டேட்ஸ் எனப்படும் எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்று நாடுகள் மீதுதான் ரஷ்யாவின் இலக்கு இருக்கும். எனவே, அவர்களை கட்டுப்படுத்த எங்களுக்கு ஆயுதங்களை தாருங்கள். ரஷ்ய விமானங்களை தடுக்க, உங்கள் நாட்டின் வான் எல்லையை அவர்கள் பயன்படுத்துவதை தடை செய்யுங்கள். அது முடியவில்லை என்றால், என்னிடம் விமானங்களைக் கொடுங்கள்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.