கொழும்பு : ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் நிலை, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் மேலும் மோசமடைந்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் கொடுக்க முடியாமல், இலங்கை அரசு சுத்திகரிப்பு ஆலையை மூடியுள்ளது. பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியுள்ளதால், இறக்குமதியாகும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது, இலங்கை பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.இலங்கை, இந்தாண்டு 52 ஆயிரத்து 50 கோடி ரூபாய்க்கு நிகரான அன்னியச் செலாவணி கடனை திரும்பத் தர வேண்டும். அதன்படி வரும் ஜூலை தவணையாக, 7,500 கோடி ரூபாய் தர வேண்டும். இதற்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
அன்னியச் செலாவணி குறைந்துள்ளதால் பால் பவுடர், மருந்து, பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு, கடன் உறுதிப் பத்திரங்களை வங்கிகள் வழங்க மறுக்கின்றன. இதனால் இலங்கை துறைமுகத்திற்கு வெளியே சரக்கு கப்பல்கள் காத்திருக்கின்றன. நிலக்கரி சப்ளை குறைந்ததால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
”டீசல், நாப்தா, பர்னஸ் ஆயில் கிடைக்காததால், தினமும் ஏழரை மணி நேரம் மின்சப்ளை நிறுத்தப்படுகிறது,” என, இலங்கை பொதுச் சேவைகள் ஆணையத்தின் தலைவர் ஜனகா ரத்னநாயகே தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ரஷ்யா – உக்ரைன் போரால், இலங்கையின் பிரதான சுற்றுலா வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement