சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 7 முதல் நேரடி விசாரணையில் மட்டுமே வழக்குகள் விசாரிக் கப்படும் என்றும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2020 மார்ச் இறுதி வாரத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, வழக்குகள் காணொலி விசார ணையாக நடைபெற்றது.
அதன்பிறகு கரோனா பரவல் குறைந்ததும் காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு முறையில் முக்கிய வழக்குகள் மட்டும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தலைமை நீதிபதிமுனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரான மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்க முடியாத வகையில் காணொலியில் இடையூறு ஏற்பட்டதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
அதையடுத்து தலைமை நீதிபதிமுனீஷ்வர்நாத் பண்டாரி, மார்ச் 7 முதல் நேரடி விசாரணை முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும், காணொலி காட்சியில் வழக்குகள் விசாரிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
கலப்பு முறையில் வழக்குகளை விசாரிக்கும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக சக நீதிபதிகள் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலமாக வழக்குகளில் ஆஜராக அனுமதிக்கப்படுவர் என்றார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடந்துவந்த காணொலி விசாரணை நிறுத்தப்பட்டு, இனி நேரடி யாக விசாரிக்கப்படவுள்ளன.