வீரவங்ச மற்றும் கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த கோட்டாபய



அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதேவேளை பவித்ரா வன்னியாராச்சியின்  போக்குவரத்து அமைச்சு பதவி ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகமவுக்கு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.

அமைச்சர்கள் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இதனிடையே புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவும் அமைச்சர்  பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் அமைச்சர்களாக பதவி வகிக்கும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியார் அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள்  தலைமையில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, வீரவங்ச, கம்மன்பில ஆகியோர் உரையாற்றி இருந்தனர்.

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிகும் பங்காளி கட்சிகளின் அமைச்சர்களை அழைக்காது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களை மாத்திரம் அழைத்து இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தார். இதன் போது இந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு விமல் வீரவங்ச, மகிந்த அமரவீர நிமல் சிறிபால டி சில்வா, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன மற்றும் கம்மன்பில ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.