திருப்பத்தூர்: உதயேந்திரம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற கவுன்சிலர், அதிமுக ஆதரவுடன் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற முயன்றதால் கவுன்சிலர்களிடையே இன்று திடீர் மோதல் ஏற்பட்டு பேரூராட்சி அலுவலகம் போர்க்களமாக மாறியது.
இதைதொடர்ந்து, மறு தேதி அறிவிக்கப்படும் வரை மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலர் குருசாமி அறிவித்தார். இதைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டமும், திமுக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், உதயேந்திரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக 8 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பூசாராணி செல்வராஜியை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக தலைமை நேற்று அறிவித்தது.
இதைதொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்காக மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்ற இருந்தது. இதில், திமுக தலைமை அறிவிப்பின்படி, உதயேந்திரம் பேரூராட்சித் தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட பூசாராணி செல்வராஜி மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்த்த நிலையில், 3-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மகேஸ்வரி என்பவர் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆதரவுடன் பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற வேட்புமனு தாக்கல் செய்ததார். இதைக்கண்ட திமுக கவுன்சிலர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கவுன்சிலர்களிடம் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது.
வாக்கெடுப்பு நடத்தினால், அதிமுக மற்றும் சுயேச்சை ஆதரவுடன் மகேஸ்வரி எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்பதை அறிந்த திமுக கவுன்சிலர்கள், எதிர்ப்பு தெரிவித்து வாக்குச் சீட்டை கிழித்தெரிந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து செயல் அலுவலரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆதரவுடன் பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்ற முயன்ற மகேஸ்வரியை தாக்க முயன்றனர்.
இதனால், பேரரூாட்சி அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த காவலர்கள் தகராறில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்களை வெளியேற்றினர். இதையடுத்து, வெளியே காத்திருந்த திமுக தொண்டர்கள் தடுப்புகளை மீறி பேரூராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, காவலர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையும் மீறி சில திமுக தொண்டர்கள் பேரரூாட்சி கட்டிட சுவர் மீது ஏறி உள்ளே குதித்து பேரூராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களாகமாக மாறியது.
இதைதொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் பதவி ஒத்திவைக்கப்படுவதாக பேரரூாட்சி செயல் அலுவலர் குருசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் உள்ளே தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநடப்பு செய்த திமுகவினர் பதிலுக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அங்கு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.