ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று சொல்லி அவர்களின் வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர்களை கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது.
10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடர்ச்சியாக போராடி வந்தவர்களை, மூன்று நாட்களுக்குப் பிறகு அழைத்து பேசினாலும், அரசு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி தரவில்லை. இத்தனைக்கும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு என்ற தலைப்பின் கீழ் அறிக்கை எண் 181ல் திமுக “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம்” என சொல்லியுள்ளது.
இதனிடையே நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், அரசாணை எண் 149ஜ ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக போராடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியான அறிக்கையில், மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி எண் 177-இல் கூறியிருந்த, “2013ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற வார்த்தைகளை முழுமையாக நம்பியவர்கள் இவர்கள்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மறு நியமன தேர்வு நடக்கும் என்ற அரசாணை வந்தது குறித்து இப்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இதை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து கேள்வி எழுப்பும்போது முதல்வர் பார்வைக்கு தான் இதைக் கொண்டுபோய் உள்ளதாகவும் இதன் மேல் நடவடிக்கை எடுக்க நாட்கள் ஆகும் என்றும் சொல்கிறார். அரசாணை வந்தபோது எதிர்த்தவர்கள் இப்போது ஏன் பதுங்குகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்புகிறது.
போராடும் தரப்பு, ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களை எதற்காக மறுபடியும் இன்னொரு தேர்வு எழுதச் சொல்லி சோதிக்கிறார்கள் என்ற கேள்வியில் நியாயம் உள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டுவந்த அரசாணையின்படி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுமுறையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணிற்கு 60 விழுக்காடு, அவர்களின் கல்வித் தகுதி மதிப்பெண்ணுக்கு 40 விழுக்காடு என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு நியமனம் நடந்த போது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பு தற்போது தேர்ச்சி பெற்றவர்களில் கல்வித் தகுதிக்கான மதிப்புடன் ஒப்பிடுகையில் அவர்களது வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் வேறுபாடுகள் காணப்பட்டு சமன்பாடு இல்லாத நிலை ஏற்படலாம் என அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த காரணத்திற்காகத்தான் இந்த அரசாணை உருவாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயம் தொட்டே இதற்கான எதிர்ப்பும் எழுந்தது.
இதை எல்லாம் ஆராய்ந்து பார்த்து தங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை திமுக எடுத்திருக்க வேண்டும். எப்படியாவது ஓட்டுக்களை கவர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பொத்தாம் பொதுவான ஒரு அறிக்கையை வழங்கி இப்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அரசு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
மக்கள் நீதி மய்யம் இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஒரு ஆக்கப்பூர்வமான யோசனையை முன் வைக்கிறது. சமீபத்திய மாதங்களில் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க, குழுக்கள் அமைக்கப்படுவது போல் இதற்கும் வெயிட்டேஜ் முறைக்கு செல்வதா அல்லது இன்னொரு தேர்வு வைப்பதா அல்லது வயது மூப்பையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதா என முடிவு செய்ய போராடுபவர்களுடன் கலந்து ஆலோசித்து இதற்கான ஒரு வல்லுனர் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். தரவுகள் ஏற்கனவே உள்ளபடியால், நீட்டிற்கு அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் குழு போல் ஒரு குழு அமைத்து, அந்தக் குழு காலம் தாழ்த்தாது தங்களின் அறிக்கையை 10 நாட்களுக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பித்து, எது சரியான தீர்வு என்று உடனடியாக முடிவு செய்து, நடக்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு போராடுபவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அரசு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
வெற்றிக்கு ஆசைப்பட்டு பொறுப்பின்றி வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு நிறைவேற்றும் பொறுப்புக்கு வந்ததும் நடைமுறை சிக்கல்களை பூதாகரமாக்கி காட்டுவது விடியலை நோக்கி நடப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசுக்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்துளார்.