திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் 15 வார்டுகளை அதிமுகவும், 12 வார்டுகளை திமுகவும், தலா 2 வார்டுகளை காங்கிரஸ் மற்றும் மதிமுகவும், தலா ஒரு வார்டில் சுயேச்சை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் 17 கவுன்சிலர்கள் இருந்தனர். பெரும்பான்மை இருந்ததால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை எளிதாக கைப்பற்றும் என பேசப்பட்டது. அதே நேரத்தில் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்த் தரப்பு கவுன்சிலர்களுக்கு வலை விரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆரணி நகராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு இன்று (4-ம் தேதி) மறைமுக தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் நகரச் செயலாளர் ஏ.சி.மணி, அதிமுக சார்பில் 13-வது வார்டு கவுன்சிலர் ஆவின் சேர்மன் பாரி பாபு ஆகியோர் போட்டியிட்டனர். அதில், திமுக வேட்பாளர் ஏசி மணி 20 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாரி பாபுக்கு 13 வாக்குகள் கிடைத்தது. அதிமுகவில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், 2 வாக்குகள் குறைவாக கிடைத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதையடுத்து, துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அக்கட்சியைச் சேர்ந்த 28-வது வார்டு கவுன்சிலர் மருதேவி பொன்னையன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தலைவர் பதவி தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுகவின் பாரி பாபு போட்டியிட்டார். இதில் அவர் 18 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மருதேவி 13 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். திமுக கூட்டணியில் 17 வாக்குகள் உள்ள நிலையில், 4 பேர் மாற்றி வாக்களித்து, அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.