டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதால் அனைத்து வழக்கமான செயல்பாடுகளையும் தொடங்கிவிடலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது ஆண்டாக அலை அலையாக வீசி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவிய போதும் அதிக உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா முதல், இரண்டாம் அலையை காட்டிலும் 3ம் அலை வேகமாக குறைய தொடங்கியது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதால் அனைத்து வழக்கமான செயல்பாடுகளையும் தொடங்கிவிடலாம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், கொரோனா 3ம் அலை இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதாக கூறினர். சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களின் உழைப்பு, கொரோனா பரவலை திறம்பட கட்டுப்படுத்த உதவியதாக தெரிவித்தனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி, வேகமாக அனைவருக்கும் போட்டு ஏற்றுக்கொள்ளச் செய்ததால், இந்தியாவில் கொரோனா இறப்புகள் குறைந்ததாக கூறினர். கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், பள்ளிகள், கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் வழக்கமான செயல்பாடுகளையும் தொடங்கிவிடலாம் என்றும், ஆனால் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இதனிடையே இந்தியாவில் கொரோனா 4வது அலை மே மாதம் தாக்கும் என்று கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் பரபர தகவல் வெளியாகியுள்ளது.