வாஷிங்டன்:’ரஷ்யாவிடமிருந்து, ‘எஸ் – 400′ ஏவுகணை சாதனங்களை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவெடுப்பார்’ என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2018 அக்டோபரில் ரஷ்யாவிடமிருந்து 37ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து எஸ் – 400 ஏவுகணை சாதனங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.இதே சாதனங்களை ரஷ்யாவிடம் வாங்கியதால், துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
ஆனால், இந்தியா மீது தடை விதிப்பது குறித்து அமெரிக்கா முடிவு எடுக்காமல் மவுனம் சாதித்தது. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வந்த மூன்று தீர்மானங்களிலும், இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளது.எனவே, துருக்கியை போல, ரஷ்யாவிடமிருந்து எஸ் – 400 ஏவுகணை சாதனங்கள் வாங்கும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் டொனால்டு லுா கூறியதாவது:அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு எதிரான ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது, பார்லி., ஒப்புதலுடன் பொருளாதார தடை விதிப்பது வழக்கம்.ஆனால், துருக்கியைப் போல, ரஷ்யாவிடம்எஸ் – 400 ஏவுகணை சாதனங்கள் வாங்கும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுமா அல்லது விலக்கு அளிக்கப்படுமா என்ற யூக செய்திகளுக்கு பதில் அளிக்க முடியாது.
தடை விதிப்பதும், விலக்கு அளிப்பதும் அதிபர் ஜோ பைடன் கைகளில் உள்ளது. இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கிய நட்பு நாடு.இந்த நல்லுறவு மேலும் வலுப்பெற, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சற்று தள்ளி நிற்பது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement