உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு இனி..?!

உக்ரைனில் இந்திய மாணவர்கள்!

பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்துவருகிறார்கள். குறிப்பாக அந்த நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்வி தான் பயின்று வருகிறார்கள். மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக அங்கு பொறியியல் பயிலும் மாணவர்களும் அதிகம் இருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் தவிர உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் உக்ரைனில் கல்வி கற்றுவருகிறார்கள். உக்ரைனில் மாணவர்கள் மருத்துவம் பயில ஆர்வம் கட்டுவதற்கு, அங்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், அங்கு மருத்துவம் பயின்றால் பல்வேறு நாடுகளில் மருத்துவராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உக்ரைன்

தற்போது உலகம் முழுவதிலிருந்தும் 75,000-க்கும் அதிகமான மாணவர்கள் உக்ரைனில் கல்வி கற்றுவருகிறார்கள். குறிப்பாக இந்திய மாணவர்கள் மாட்டும் 18,000-க்கும் அதிகமானோர் அங்குக் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் கல்வி கற்றுவருகிறார்கள். மாணவர்களைத் தவிர மேலும் பல இந்தியர்கள் அங்கு வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

போர் சூழல்:

உலகப் போருக்குப் பின்பு சோவியத் யூனியன் 15 நாடுகளாகப் பிரிந்தது. அப்படிப் பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. பிரிந்த பல நாடுகள் தங்களை நேட்டோ உறுப்பு நாடுகளோடு இணைத்துக்கொண்டன. உக்ரைனும் அதற்கான முன்னெடுப்புகளை நீண்டகாலமாகச் செய்துவருகிறது. அதே சமயத்தில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நீண்டகாலமாகவே பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. ரஷ்யாவிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள நேட்டோவில் உறுப்பு நாடாக தங்களை இணைத்துக்கொள்ள உக்ரைன் விரும்பியது.

உக்ரைன்

அதிக பலம் பொருந்திய ரஷ்யாவை ஒற்றை நாடக சமாளிக்க முடியாது என்று உக்ரைன் கருதுகிறது. அப்படி உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அது தங்களுக்குப் பாதகமாக அமையும் என்று ரஷ்யா எண்ணுகிறது. தற்போது உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்று கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. போருக்கு நடுவில் பெலாரஸ் எல்லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் எட்டவில்லை. அதனால், உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப் படுத்தியுள்ளது ரஷ்யா.

நாடு திரும்பும் மாணவர்கள்:

உக்ரைனிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஏற்கெனவே நாடு திரும்பியுள்ளனர். அதே சமயம் ரஷ்யப் படையினரின் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பத்திரமாகவும், அவசரமாகவும் தாய் நாட்டுக்கு அழைத்துவரும் பணியை இந்திய அரசு செய்துவருகிறது. தற்போது வரை 17,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களை இந்தியா அழைத்து வருவதற்காக பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

நாடு திரும்பிய மாணவர்கள்

உக்ரைனில் நிலைமை எப்போது சீராகி இயல்புநிலை திரும்பும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்களுக்கு அங்கிருந்து உயிருடன் நாடு திரும்புவோமா என்ற அச்சம் ஒருபுறம், இந்தியா திரும்பிய பின்பு கல்வி என்ன ஆகும் என்ற கவலை இன்னொருபுறம் சூழ்ந்துள்ளது. “இந்தியாவில் கற்றுத்தரப்படும் மருத்துவக் கல்வியைப் போன்றேதான் உக்ரைனில் சொல்லித்தரப்படும் பாடத்திட்டமும் இருக்கும். தற்போது ஆன்லைன் வாயிலாகப் பாடம் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலைமை சீரான பின்பு உக்ரைனிலேயே மீண்டும் எங்கள் கல்வியைத் தொடருவோம்” என்று உக்ரைனிலிருந்து திரும்பிய சில மாணவர்கள் கூறுகிறார்கள்.

கல்வி தொடர வாய்ப்புள்ளதா?

இந்தச் சூழலில், தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இங்குக் கல்வியைத் தொடர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபுவிடம் பேசினோம். “நாடு திரும்பிய மாணவர்கள் இங்கு மருத்துவக் கல்வியைத் தொடர்வது குறித்து முடிவு செய்யவேண்டியது மத்திய அரசு தான். அவர்கள் சேர்க்கலாம் என்று முடிவு தெரிவித்து மாநில அரசுக்குத் தகவல் தெரிவித்தால் மட்டும்தான் மாணவர்களைச் சேர்க்க முடியும்” என்று கூறினார்.

உக்ரைன்

உக்ரைனில் நிலைமை விரைவில் சீராகி மாணவர்கள் அங்கு சென்று தங்கள் கல்வியைத் தொடர்ந்தால் மகிழ்ச்சி தான். அதேசமயம் அங்கு நிலைமை மோசமாகி மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டால், தற்போது மாணவர்களை மீட்பதில் எப்படி மத்திய அரசு விரைந்து செயல்படுகிறதோ, அதே போல அவர்கள் கல்வியைத் தொடரவும் அரசு விரைந்து ஒரு முடிவு செய்யவேண்டும் என்பதுவே மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.