பெங்களூரு: “உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடலுக்கு பதிலாக 10 மாணவர்களை அங்கிருந்து மீட்டு வந்துவிடலாம்” என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்த மாணவர் நவீன். இவர் கார்கிவ் தேசிய மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த நிலையில், போர்ச் சூழலுக்கு இடையே அந்நகரில் உள்ள கடைக்கு உணவு வாங்க சென்றபோது வான்வழித் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவர் நவீன் உடல் எப்போது இந்தியா வரும் என்ற கேள்விக்கு, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் அளித்த பதில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்த கர்நாடக மாணவர் உடல் எப்போது தாய் நாடு வந்தடையும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு, ”உயிரிழந்த மாணவரை வைக்கும் இடத்தில் 8 முதல் 10 மாணவர்களை உக்ரைனிலிருந்து அழைத்து வந்துவிடலாம். உக்ரைனில் உள்ள மாணவர்களை வெளியேற்றுவது ஒரு கடினமான செயலாக இருந்தாலும், உயிரிழந்த ஒருவரின் உடலை போர் நடைபெறும் பகுதியிலிருந்து நாட்டிற்கு கொண்டு வருவது மிகவும் கடினமான பணியாகும். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கர்நாடகா எம்எல்ஏ அரவிந்த் தெரிவித்தார்.
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த பதிலை பல தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார்.