உக்ரைன்- ரஷியாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
உக்ரைனில் சுமார் 20,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 6000 பேர் கடந்த சில நாட்களில் இந்தியா திரும்பியுள்ளதாகவும் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசை தாக்கி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களின் உயிரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. அவர்களை அழைத்து வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது? ஏன் முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
மாணவர்கள் உள்பட இந்தியர்களை அழைத்துவர உடனடியாக போதுமான எண்ணிக்கையிலான விமானங்களை ஏற்பாடு செய்து, அனைத்து மாணவர்களையும் விரைவில் அழைத்து வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. உக்ரைனின் அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷிய படைகள்- 3 வீரர்கள் பலி