பாரிஸ்,
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் – ரஷியா இடையே நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது மட்டுமே பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், போரை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனில் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துமாறு புதினிடம் மேக்ரான் வலியுறுத்தினார். 90 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எந்த வித கணிப்பும் இல்லாமல் உக்ரைனில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்பதை நாம் எதிர்பார்க்கலாம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் கூறியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதின் இன்று கூறிய எதுவும் உறுதியளிக்கும் வகையில் இல்லை என்றும் இம்மானுவேல் கூறியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.