உக்ரைன் அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: இயக்குநர் தகவல்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா படுவேகமாக முன்னேறி வருகிறது. தலைநகர் கீவ்-யை கைப்பற்றும் நோக்கில் பல்முனைத் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்புக்கும் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயம், அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால் அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது.

ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உக்ரைனின்
ஜாபோரிஜியா
அணு மின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதனால், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஆனால், அணுஉலையில் பற்றி எரியும் தீயை அணைக்கவிடாமல் உக்ரைன் தீயணைப்பு வீரர்களை ரஷ்யப் படையினர் தடுத்ததாகவும், அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின. உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்களையும், அவசரகால சேவைகளையும் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆண்களும் பெண்களுமாய்.. பெட்ரோல் குண்டுகளுடன்.. தயார் நிலையில் உக்ரைன் நகரம்!

இந்த நிலையில், ரஷ்ய படைகளால் தாக்குதலுக்கு உள்ளான ஜாபோரிஜியா
அணு மின் நிலையம்
பாதுகாப்பாக உள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார். ரஷ்ய தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அணுஉலையின் இயக்குநர் ஆண்ட்ரெய்டுஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, கதிர்வீச்சு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், “கதிரியக்க அளவுகள் அதிகரித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜாபோரிஜியா அணுஉலை வெடித்துச் சிதறினால் செர்னோபில் போன்று 10 மடங்கு அழிவு ஏற்படும். ரஷ்யா உடனடியாக தாக்குதலை நிறுத்தி, தீயணைப்பு வீரர்கள் அணுஉலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வர உதவி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.