கீவ்: உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கியை கொல்ல நடந்த 3 முயற்சிகளை அந்நாட்டு அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்: ஜெலன்ஸ்கியை கொல்ல வக்னர் குழு மற்றும் சிசின் போராளிகள் குழுவினர் உக்ரைனுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பிரிவினர், உக்ரைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை விரும்பாத அதிகாரிகளே, இந்த தகவலை தெரிவித்துள்ளனர். உஷாரடைந்த உக்ரைன் அதிகாரிகள், கீவ் நகரின் புறநகரில் கடந்த சனிக்கிழமை, சிசின் குழுவை சேர்ந்தவர்களை சுட்டு கொன்றனர். வக்னர் குழுவினரின் நடமாட்டத்தை கண்காணித்தும், அவர்களின் முயற்சிகளையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
ரஷ்யா தாக்குதலை துவங்கியதுமே, ஜெலன்ஸ்கியை பாதுகாப்பாக அழைத்து செல்வதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அதனை ஏற்க மறுத்து, தலைநகர் கீவ் நகரிலேயே ஜெலன்ஸ்கி தங்கி உள்ளார். இதற்கு பல நாட்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், தைரியம், நேர்மை மற்றும் சுதந்திரத்திற்கான அடையாளமாக ஜெலன்ஸ்கி உள்ளதாக தெரிவித்தார். ரஷ்யாவின் முதல் குறியாக நான் தான் இருப்பேன் எனக்கூறியுள்ள ஜெலன்ஸ்கி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த புடின் முன்வர வேண்டும். உக்ரைன் சரணடைந்து விடும் என யாராவது நினைத்தால், அவர் உக்ரைனை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை என அர்த்தம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement