புதுடெல்லி:
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் உக்கிரமான வான் தாக்குதல்களை நடத்திய ரஷிய படைகள், பிரங்கிகளால் தொடர்ந்து தாக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் உக்ரைன் படைகளின் ஆக்ரோஷமான பதில் தாக்குதல் மற்றும் பீரங்கி எதிர்ப்பு தாக்குதலால் ரஷிய படைகள் முன்னேற முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின், இந்த சண்டையில் உக்ரைனுக்கு மிகவும் கைகொடுக்கிறது. சாதாரண ராக்கெட் லாஞ்சர் போன்று எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாவ்லின் மூலம் ஏவுகணைகளை மிகவும் துல்லியமாக செலுத்தி எதிரிகளின் பீரங்கிகளை தகர்த்து அழிக்க முடியும். கடந்த சில தினங்களாக ரஷியாவின் பீரங்கி வாகனங்கள் இந்த ஜாவ்லின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. இதனால் ரஷிய பீரங்கிகள் உக்ரைனுக்குள் எளிதாக செல்ல முடியவில்லை.
இந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷியாவை உக்ரைன் படைகள் திணறடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாவ்லின் மூலம் 300 ஏவுகணைகள் செலுத்தியதில், 280 ரஷிய பீரங்கிகள் அழிக்கப்பட்டதாக, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி பத்திரிகையாளர் ஜாக் மர்பி, தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். இது 93 சதவீத அழிப்பு விகிதம் ஆகும். தேவைப்பட்டால், ஜாவ்லினை நேரான விமானப் பாதை முறையிலும் சுட்டு, விமானத்தை வீழ்த்த முடியும்.
உக்ரைனில் இப்போது ஜாவ்லின் இருப்பதை ரஷியர்கள் அறிந்தவுடன், டான்பாஸில் உள்ள ரஷியாவின் டி-72 பீரங்கிகள் பெரிய அளவில் முன்னேறவில்லை. முன்களத்தில் நிறுத்தப்பட்ட பீரங்கிகளும் பின்வாங்கியதாக பத்திரிகையாளர் ஜாக் மர்பி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.