லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு , பாஜக அமைச்சர் பதவியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்பட மொத்தம் 676 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களித்தனர். மதியத்திற்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 5 மணி நிலவரப்படி 53.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
கடைசி கட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மொத்தம் 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.