கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய போரின் 7-வது நாளான நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்கி கூறும்போது, “ரஷ்ய படையெடுப்பின் முதல் 6 நாட்களில் கிட்டத்தட்ட 6,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம். என்றாலும் குண்டுவீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்கள் மூலம் எங்கள் நாட்டை ரஷ்யா கைப்பற்ற முடியாது” என்றார்.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “எங்கள் நாட்டுக்குள் படைகளை அனுப்ப ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் தயாராகி வருகிறது. இதற்கு எங்களிடம் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் நேற்று கூறும்போது, “ரஷ்ய படையெடுப்பை தடுக்க பல மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன. வெளிநாட்டிலிருந்து ஸ்டிங்கர் மற்றும் ஜெவெலின் ஏவுகணைகளை விரைவில் பெறவிருக்கிறோம். துருக்கிய ட்ரோன்களுடன் மற்றொரு கப்பலும் வருகிறது” என்றார்.