"எந்த சூழலிலும் கண்ணன் என்னை விட்டுக் கொடுக்கல!" – பர்சனல் பகிரும் தீபிகா

‘என் அம்மாவும், அப்பாவும் தான் என் பலமே… சில சமயம் ஏதாச்சும் சீரியல் வாய்ப்பு வந்துச்சான்னு கேட்பாங்க… இதுவரைக்கும் அவங்களுடைய கஷ்டத்தை என்கிட்ட காட்டினதில்ல. நானும் அவங்ககிட்ட என் கஷ்டத்தை காட்டினதில்ல. ரெண்டு பேரும் தூரமா இருக்கிறதனால முடிஞ்ச அளவுக்கு சோகத்தை வெளிக்காட்டிக்காம சந்தோஷத்தை பரிமாறிக் கொள்வோம்!’ என்றவாறு பேசத் தொடங்கினார் தீபிகா. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அந்தத் தொடரில் இருந்து விலகியதை அடுத்து தற்போது எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம்.

தீபிகா

இப்ப என்னுடைய யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என சோசியல் மீடியாவில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். ரெண்டு சேனல்களில் இருந்து வாய்ப்பு வந்துச்சு. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க எனக்கு ஓகே தான் ஆனாலும் அந்த கதைக்களம் எனக்கு செட் ஆகும்னு தோணாததால வேண்டாம்னு சொல்லிட்டேன். எனக்கு பெரிய அளவில் கான்டாக்ட் இல்லாததால கதாநாயகிக்கான தேர்வு நடக்கிறது தெரியுறது இல்ல. அப்படி தெரியும் பட்சத்தில் ஆடிஷனுக்குப் போகவும் தயாராக தான் இருக்கேன் என்றவரிடம் அவருடைய யூடியூப் சேனல் குறித்து கேட்டோம்.

சமீபத்தில் எங்க ஊருக்கு போயிருந்தப்போ சும்மா அதை Vlog மாதிரி எடுத்து போட்டிருந்தேன். அந்த கிராமத்து கலாசாரம் பலருக்கும் பிடிச்சிருந்ததால தொடர்ந்து அப்படியான வீடியோக்களில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். தவிர, எனக்கு டிராவல் பண்றது ரொம்ப பிடிக்கும். அது சார்ந்தும், வீடியோ எடுக்க ஆரம்பிச்சிருக்கேன் என்றவர் சரவணா விக்ரம் (‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன்) நட்பு குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

தீபிகா

அந்த சீரியலில் கிட்டத்தட்ட ஆறு மாசம் வேலை பார்த்திருக்கேன். முதல் மூன்று மாதங்கள் கண்ணன்கிட்ட அதிகமா பேசினதே கிடையாது. ஷாட் இல்லாதப்ப பேசும்போதும் ‘வாங்க போங்க’ன்னு மரியாதையோடு தான் பேசுவேன். நாங்க ரெண்டு பேரும் ஜோடியா சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதும் எங்களுடைய கேரக்டர் கண்ணன் – ஐஸூ என்கிற பெயரிலேயே சும்மா ரீல்ஸ், ஃபோட்டோஸ்னு எடுக்க ஆரம்பிச்சோம். அடுத்த மூணு மாசத்துல தான் நாங்க ஃப்ரெண்ட்லியா பேசினோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து யூடியூப் எல்லாம் ஆரம்பிச்சோம். கண்ணனுக்கு எங்க வீட்டை அறிமுகப்படுத்தினேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கேன்னு என்னுடைய ஃபேமிலி பற்றி அவனுக்கு தெரிய ஆரம்பிச்சது. வேலை போகப் போகுதுன்னு தெரிஞ்சதுமே ரொம்ப உடைஞ்சிட்டேன்.

எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. என்னுடைய அப்பா, அம்மாவை கவனிச்சிக்கவும், கடன் பிரச்னைகளை தீர்க்கவும் எனக்கு வேலை ரொம்பவே முக்கியம். அது இல்லைங்கிறப்போ ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனா, அந்த சமயத்திலும் கண்ணன் என் கூட இருந்து இன்ஸ்டாகிராம், யூடியூப்னு எனக்கு சப்போர்ட் பண்ணான். இப்ப சோசியல் மீடியாவில் இருந்து வர்ற பணத்தை வச்சு ஏதோ சமாளிச்சிட்டு இருக்கேன். கண்ணன் மூலமாக தான் ஐஸ்வர்யா என்கிற ரோலில் நடிச்ச நான் வெளியே தெரிஞ்சேன். இப்ப வரைக்குமே கண்ணனுடைய ரசிகர்கள் அவனை வச்சு தான் என்னையும் கொண்டாடுறாங்க. அந்த வகையில் கண்ணன் என்னை என்னைக்குமே விட்டு கொடுக்கலை. இப்ப வரைக்கும் எனக்கு நல்ல நண்பனா இருக்கான். அவனை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சது என்னுடைய அதிர்ஷ்டம்.

தீபிகா

போன வருஷம் விஜய் அவார்ட்ஸ் நடந்தப்ப அப்ப தான் என்னுடைய டிராக் ஆரம்பிச்சி இருந்தது. ஆனா, அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகிட்டேன். டிவியில் என்னுடைய முகத்தை காட்டியிருக்காங்க. அதை பார்த்துட்டு, என் அம்மா, ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இந்த வருஷம் கண்டிப்பா நல்லா நடிச்சு ஸ்டேஜ்ல நின்னு பேசி அவங்களை பெருமைப்படுத்தணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அது முடியாம போச்சு. நானும் சரி, என் அம்மாவும் சரி இப்ப நடக்கப் போகிற விஜய் அவார்ட்ஸ்ல கண்ணன் விருது வாங்கணும்னு விரும்புறோம். என்னால அந்த மேடையில் ஏற முடியலைன்னாலும் என் ஃப்ரெண்ட் ஏறி வாங்கணும்னு விரும்புறேன் என்றவரிடம் முகப்பரு பிரச்னை குறித்து கேட்டோம்.

இப்ப முகப்பரு ட்ரீட்மென்ட் முடிஞ்சிடுச்சு. முகப்பரு வர்றதுக்கு முன்னாடி என் முகம் எப்படி இருக்குமோ அப்படி ஆகிடுச்சு. மேக்கப் போட்டா சரியா மேட்ச் ஆகிடும். இப்ப அந்த பிரச்னை இல்லை. முகப்பரு பிரச்னையை பொறுத்தவரை நான் அதை பெரிய பிரச்னையாகவே நினைச்சது இல்லை. மனசளவுல அந்த பிரச்னை என்னை காயப்படுத்தியிருந்தாலும் நாளடைவில் அதை சுலபமா கடந்துட்டேன். அதை ஒரு காரணமா அடுத்து எந்த இடத்திலும் சொல்லிடக் கூடாது என்பதில் ரொம்ப கவனமா இருக்கேன். இப்ப ஸ்கின்னை புரொபஷனலா மெயின்டெயின் பண்ணிட்டும் இருக்கேன்.

தீபிகா

சீரியலில் இருந்து வெளியே வரும்போது எந்த அளவுக்கு ரசிகர்கள் எனக்கு அன்பையும், ஆதரவையும் கொடுத்தாங்களோ அதே அளவுக்கு இன்னமும் எனக்கு கொடுத்துட்டு இருக்காங்க. ஐஸூவை ரொம்பவே மிஸ் பண்றோம்னு இன்ஸ்டாகிராமில் பலர் மெசேஜ் அனுப்புவாங்க. அப்போதெல்லாம், ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, நல்லதொரு பிராஜக்ட்டில் நிச்சயம் எல்லாரையும் மீண்டும் சந்திக்கிறேன்!’ என்றார், தீபிகா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.