கிஷோர் பியானியின் தலைமையிலான ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்துக்குத் தந்த கடன் வாராக் கடனாக மாறியுள்ள சூழலில், இந்த நிதி ஆண்டின் காலாண்டில் ரூ.800 கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்து, அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் , ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தது. இந்த நிலையில், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கக்கூடாது என்று சொல்லி, ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் வரும் 15-ம் தேதிக்குள் இரு தரப்பினரும் சுமுகமாகப் பேசி ஒரு முடிவுக்கு வரும்படி உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்ததிருக்கிறது. இந்தக் குறுகிய காலத்துக்குள் சுமுகமான தீர்வு ஏற்படுமா, ஏற்படாதா என்கிற நிலையில் இன்னொரு அதிர்ச்சியான செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்துக்கு 27 வங்கிகள் ஒன்று சேர்ந்து ரூ.9,000 கோடி கடன் வழங்கியிருந்தன. இதில் குறிப்பிட்ட அளவு கடன் தொகை இப்போது வாராக் கடனாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்துக்கு இந்தியன் வங்கி ரூ.1,100 கோடி வழங்கி இருந்தது. இதில் கிட்டத்தட்ட ரூ.800 கோடி வாராக்கடனாக மாறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இந்தத் தொகையில் 15 சதவிகிதத்தை வாராக்கடனை சமாளிக்க ஒதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு வெளியாகும்போதுதான் இது தொடர்பான துல்லியமான புள்ளிவிவரங்கள் தெரியவரும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இந்தியன் வங்கியின் தலைவராக கோபாலகிருஷ்ணன் இருந்தபோது எக்கச்சக்கமான வாராக்கடன் பிரச்னை இருந்தது. அவற்றிலிருந்து தப்பித்து மீண்டும் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்த வங்கியை மீண்டும் வாராக்கடன் பிரச்னை பாடாய்ப்படுத்துகிறதே என்று வருத்தப்படுகிறார்கள் இந்த வங்கியின் நலம் விரும்பிகள்.