புதுடில்லி : தெலுங்கானாவில் இன்று நடக்கவுள்ள,’கவசம்’ எனப்படும், ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனையில், ரயில்வே அமைச்சரும், ரயில்வே வாரிய தலைவரும் ஆளுக்கொரு ரயிலில் பயணிக்க உள்ளனர்.
ரயில் விபத்துக்களை தடுப்பதற்காக, ‘கவசம்’ எனப்படும் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.இதை ரயிலில் பொருத்துவதன் வாயிலாக, இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வரும்போது, அவை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதற்கு முன், குறிப்பிட்ட தொலைவில் ரயில் தானாகவே நிற்க, ‘கவசம்’ எனப்படும் விபத்து தடுப்பு செயல்முறை வழி செய்கிறது.
மேலும், ஒரு ரயிலின் பின்னால் மற்றொரு ரயில் மோதுவதை தவிர்க்கவும், சிவப்பு சிக்னலை கவனிக்காமல் பயணிக்கும் ரயிலை தானாகவே நிறுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள சனத்நகர் – சங்கர்பள்ளி வழித்தடத்தில் இதன் சோதனை இன்று நடக்கிறது. இதில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.திரிபாதி பங்கேற்க உள்ளனர். சோதனையின் போது இவர்கள் இருவரும் ஆளுக்கொரு ரயிலில் பயணிக்க உள்ளனர்.
Advertisement