பெங்களூரு: கர்நாடக மாநில பட்ஜெட்டில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட தமிழ்நாடு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இன்று மாநில அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் தேவையான அனைத்து அனுமதியும் பெற்று மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேகதாது அணை திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக ஒன்றிய நீர்வள ஆணையத்தில் கடந்த ஆண்டில் தாக்கல் செய்த போதே தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி ரூபாயை கர்நாடக பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை கட்டப்பட உள்ளதாக கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.