“கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்றவர்கள், உடனடியாக…" – ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று மறைமுக தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் இடங்களை ஒதுக்கியது. அதன்படி, வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மறைமுகத் தேர்தலுக்கு முன்னிறுத்தியிருந்தன.

திமுக-வின் கூட்டணிக் கட்சியினர் நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இன்று அரங்கேறியதோ நேரெதிரான காட்சிகளே…

தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், அவர்களை எதிர்த்து தி.மு.க-வினரே தன்னிச்சையாகப் போட்டியிட்டு, கூட்டணிக் கட்சியினரை தோற்கடித்தனர்.

திமுகவினரின் இந்த செயலுக்கு கூட்டணிக்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. திருமாவளவன், கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிடோர் வெளிப்படையாகவே இந்த விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். சில இடங்களில் தி.மு.க-வை எதிர்த்து கூட்டணிக்கட்சிகள் போராட்டம் கூட நடத்தின.

கூட்டணி கட்சிகளுடன்

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க தலைமை அறிவித்ததை மீறி, போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

திமுக கூட்டணி கட்சிகளுடன்

அந்த மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்ன `கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில்’ மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாட்டைச் சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

திமுக சின்னம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.