Tamilnadu News Update : தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான விளம்பர வைப்பது தொடர்பாக பொது உத்தவை பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகை வைக்க உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கோவில்களுக்கு வரும் மாற்று மதத்தினர் முறையாக ஆடை அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதித்து கோவில்களின் முன்பு விளம்பர பலகை வைக்க உத்தரவிட வேண்டும் என்றும், கோவில்களில் மாற்று மதத்தினரை அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த பொதுநல மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், ஆடைக்கட்டுப்பாடு உள்ள கோவில்களில் மட்டும் இது போன்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுதாரார் ரங்கராஜன் நரசிம்மன், மாற்று மதத்தினர் கோவிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகள் அணிந்து வருவது தொடர்பான புகைப்படங்கள் சமர்பித்து குற்றம் சாட்டினார். மேலும் இதன் காரணமாக ஒவ்வொரு கோவில்களிலும், விளம்பர பலகைககள் வைக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர், ரங்காஜன் நரசிம்மன் கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடுகள் இருப்பதால், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கோவிலுக்கு வருபவர்கள் முறையான ஆடை அணிந்து வர வேண்டும் என்றும், இதை நடைமுறைபடுத்துவதற்கு கோவில் நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு குறித்த பலகைகள் வைக்க வேண்டுமென பொது உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்ககை முடித்து வைத்தனர் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“