சிறந்த கிரிக்கெட் ஜாம்பவானை உலகம் இழந்துவிட்டது- வார்னே மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
ஷேன் வார்னே மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, மிகச்சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரை உலகம் இழந்துவிட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவரும் ஐசிசி முன்னாள் தலைவருமான சரத் பவார் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது பந்துவீச்சைப் பார்த்த நம் தலைமுறைக்கு “சுழல்” என்றால் என்னவென்று தெரியும், ஏனென்றால் களத்தில் அவரது ஆட்டம் அபாரமாக இருக்கும்’ என சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ஆதித்ய தாக்கரே கூறி உள்ளார்.
‘ஷேன் வார்னே உண்மையிலேயே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான். சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிற சிறந்த பேட்ஸ்மேன்களுடனான போட்டியின்போது அவரது மாயாஜால பந்துவீச்சை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாது. ஆழ்ந்த இரங்கல்கள்’ என மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.
வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது என விராட் கோலி கூறி உள்ளார். களத்தில் சிறந்த வீரராகவும், வாழ்க்கையில் சிறந்த மனிதராகவும் திகழ்ந்த ஷேன் வார்னே மறைவை ஏற்க முடியவில்லை என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். ஷேன் வார்னே நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி ஐபிஎல் கோப்பை வென்றது
ஆஸ்திரேலியா அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தவர் ஷேன் வார்னே. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் தொடர்களில் ஷேன் வார்னே 55 போட்டிகளில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.