சென்னை: செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்றுசெவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அச்சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் சமீபத்தில் அமைச்சர் அறிவித்த திட்டம் மூலம்,தமிழ் கற்றவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவித்திறன் குறையுடையோர் தங்கள் எதிர்காலத்தை எண்ணி மனக்கலக்கம் அடைந்துள்ளனர். செவித்திறன் குறையுடையோர் இந்த உலகை எப்போதும் ஓசையற்ற நிலையில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்தவர் என்ன கூறுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய நிறைய போராடுகின்றனர். உதட்டின் அசைவு மூலமும், உடல் மொழி மூலமும் போராடித் தான் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு, செவித்திறன் குறையுடையவர்களுக்கு ஒரு மொழி கற்றல் முறையை அமல்படுத்தி ஒன்றாவது வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை 2-வது மொழிக்கு விலக்களித்துள்ளது. இவ்வழியில் தமிழகத்தில் தமிழ்வழி, ஆங்கில வழி படித்த செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சரிசமமாக உள்ளனர். செவித்திறன் குறையுடையவர்களுக்கும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் நல்லகல்வி அளித்து, பணியில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டியது பெற்றோர் மற்றும் அரசின் கடமையாகும்.
உயர்கல்வி கற்க கலை, பொருளாதாரம் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட அறிவியல் மட்டுமே அவர்களுக்கு தரப்பட்ட பிரிவுகளாக உள்ளது. வேலையிலும் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இந்த இக்கட்டான சூழலில், செவித்திறன் குறையுடைய பிள்ளைகளின் வாய்ப்பை மேலும் மாநில மொழிக்கல்வி மூலம் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதாலும், ஒரு மொழிமட்டுமே கற்க முடியும் என்பதாலும்ஆங்கில வழிக் கல்வியை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசாணை அவர்களை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கியுள் ளது. எனவே, செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்துபிற தேர்வை முந்தைய வழக்கப்படி தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.