தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுத் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்பதால், டெல்டா மாவட்டங்களிலும், அதையொட்டிய வடமாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவியதாகத் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதையடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்குத் திசையில் வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
நாளை கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மார்ச் 6 அன்று தமிழகத்தில் அநேக இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்றும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மார்ச் 7 அன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்றும், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மார்ச் 8 அன்று தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று முதல் மார்ச் 7 வரை வடதமிழக, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.