புதுடெல்லி: 2024 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
பெங்களுருவில் நாளை (5 ஆம் தேதி) நடைபெறவுள்ள 6 தென்மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் உள்பட 6 தென்மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் ஜல்ஜீவன் மிஷன், தூய்மை இந்தியா கிராமப்புற இயக்கம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்கிறார்.
இந்த மாநாட்டில் மாநில அமைச்சர்களுடன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தெலங்கானா மாநிலமும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும், 2021 ஆம் ஆண்டிலேயே 100 சதவீத குடிநீர் இணைப்பு பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்சக்தி அமைச்சகத்தில் செயல்படுத்தப்படும் மற்றுமொரு முக்கிய திட்டம் தூய்மை இந்தியா கிராமப்புறத் திட்டமாகும். 2019 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் ஜல்ஜீவன் மிஷன் இயக்கத்தின்கீழ் ரூ.20,487.58 கோடியை மத்திய அரசு 6 தென்மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ஒதுக்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ. 3,691.21 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 30.22 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா கிராமப்புற திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு ரூ. 26.29 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.6.89 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.