சென்னை: தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோயில்களில் நடப்பாண்டில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி ஆதி படவேட்டையம்மன் கோயில், பிரிக்ளின் சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயில், அயனாவரம் மேட்டுத் தெருவிலுள்ள சர்வ சக்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் மொத்தம் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் 47 முதுநிலை கோயில்களும், முதுநிலை அல்லாத கோயில்களும் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோயில்களில் நடப்பாண்டில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எம்மதமும் சம்மதம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற அடிப்படையில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறோம். அதேபோல், எந்தவொரு அரசியல் கலப்பும் இல்லாமல் சிறப்பாக சிவராத்திரி விழா நடத்தியுள்ளோம். வரும் காலங்களில் மகா சிவராத்திரி விழா இன்னும் சிறப்பாக நடத்தப்படும். எம்மதமும் சம்மதம் என்றுநினைக்கும் கட்சி திமுக. எங்களுக்கு ஆத்திகர்களும், நாத்திகர்களும், வாக்களித்திருக்கிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.