சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்தவில்லை எனக் கூறி, ‘தி மயிலாப்பூர் கிளப்’புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை ‘தி மயிலாப்பூர் கிளப்’ குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மயிலாப்பூர் கிளப்புக்கு 2016-ம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்கும் வகையில் அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது. அந்த வாடகையை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, மயிலாப்பூர் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிளப் தரப்பில், ‘116 ஆண்டுகள் கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்து கிளப் நடத்தி வரப்படுகிறது. வாடகை தொகையும் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என வாதிடப்பட்டது.
அப்போது, இந்துசமய அறநிலைய துறை தரப்பில், ‘4 கோடியே 77 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. அந்த வாடகை பாக்கித் தொகையை கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கிளப் தரப்பில், ’ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதால் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிலத்துக்கான வாடகையை மீண்டும் நிர்ணயிக்க கோரி விண்ணப்பிக்க கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
அந்த விண்ணப்பத்தின் மீது 2 மாதங்களில் வாடகை மறு நிர்ணய நடைமுறையை முடிக்க அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வாடகை பாக்கியை செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டாம் எனவும், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டு, விசாரணையை இரு மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.